இரு ஒப்பந்த பணியாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம் pt desk
தமிழ்நாடு

திருச்சி: மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்த இரு ஒப்பந்த பணியாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சியில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கி இரு ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: லெனின்.சு

திருச்சி மாநகராட்சி அரைவட்ட சுற்றுச் சாலையில் உள்ள ஓலையூர் பிரிவு சாலையோரம் உயர் அழுத்த மின் கம்பம் பழுதடைந்துள்ளது. இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து பழுதான சரி செய்யும் பணியில் இரண்டு ஒப்பந்த மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது திடீரென்று உயர் அழுத்த மின் கம்பத்தில் இருந்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மருத்துவமனை முற்றுகை

இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும், மணிகண்டம் காவல்நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து இரு சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒருவர் மணப்பாறை அடுத்த அருணா பட்டியைச் சேர்ந்த கலாமணி (45) என்பதும், மற்றொருவர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் (32) என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களும், சக தொழிலாளர்களும், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் இழுப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.