ஓலைச்சுவடியில் திருக்குறள் எழுதும் ஆசிரியை பெ.சித்ரா இளஞ்செழியன்
ஓலைச்சுவடியில் திருக்குறள் எழுதும் ஆசிரியை பெ.சித்ரா இளஞ்செழியன் PT
தமிழ்நாடு

‘திருக்குறளை புனித நூலாக ஐநா அறிவிக்க வேண்டும்’ - பள்ளி முதல்வரின் அசத்தல் முயற்சி!

PT WEB

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில் சிபிஎஸ்இ பள்ளியொன்று உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் பெ.சித்ரா இளஞ்செழியன். இவர் கடந்த 5ம் தேதி உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு 133 பனை ஓலையில் 1,330 திருக்குறளை எழுதும் சாதனையை செய்துள்ளார். அதன்படி கடந்த 5-ம் தேதி, காலை 9.03 மணிக்கு தொடங்கி இடைவிடாது இரவு 10.33 மணி வரை எழுதினார்.

ஓலைச்சுவடியில் திருக்குறள்

இதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரம் 13 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 1.5 அடி அகலம் உள்ள பனை ஓலையில் 1,330 திருக்குறளை எழுதி புதிய சாதனையை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்பொழுது திருக்குறள் உலகப் பொதுமறையாக இருப்பினும் உலகப் புனித நூலாக அதை உலக நாடுகள் ஐக்கிய சபையான ஐநா அறிவிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பணியை செய்து முடித்துள்ளேன்” என்று கூறினார்.

இவரது சாதனையை கண்காணிப்பாளராக வெங்கடேசன் என்பவர் முன்னின்று கண்காணித்தார். பள்ளி முதல்வரின் இத்தகைய சாதனை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பள்ளி முதல்வரின் புதிய சாதனையை அறிந்த பள்ளி ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.