திருச்சி வையம்பட்டி அருகே மூடப்பட்ட குவாரியில் இருந்து கிரஷர் மண் ஏற்றிய வாகனங்களை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியில் குவாரி ஒன்று உள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அமைக்கப்பட்ட குவாரியில் தற்போது பணிகள் முடிவடைந்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாரியில் உள்ள பாதுகாவலர் மூலம் அங்கிருந்து கிரஷர் மண்ணை இரவில் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 200 அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ள குழியால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறி அந்த பகுதி மக்கள் இன்று காலை கிரஷர் மணல் ஏற்றிய 3 டிப்பர் லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.