தமிழ்நாடு

திருச்சி: காலை 6 மணிக்கே தடுப்பூசி போட்டுக்கொள்ள சாலையில் காத்திருந்த பொதுமக்கள்

Veeramani

திருச்சி உறையூர் எஸ்.எம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு காலையிலிருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை ஆறு மணிக்கெல்லாம் பொதுமக்கள் எஸ்.எம் பள்ளியின் முன் வந்து நிற்க துவங்கிவிட்டனர்.

வயதானவர்கள் எல்லாம் காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நின்றபோது, 90 நாட்களுக்கு மேலே வரவேண்டும் என இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தகவல் தெரிவித்ததாக ஆதங்கப்பட்டனர். பள்ளியின் உள்ளே பல மணி நேரம் நிற்க முடியாமல் பொதுமக்கள் தரையில் அமர்ந்திருக்க காட்சிகளும் அரங்கேறியது

கோவிட் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் பேராயுதமான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்களிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி குறைந்த அளவு மட்டுமே வருகிறது, மாநகர பகுதிகளில் நாளொன்றுக்கு 3200 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் 400 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளியின் உள்ளே நிற்கிறார்கள். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து வந்து வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பிற்கு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 3200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் 4 கோட்டங்களில் 8 இடங்களில் மட்டுமே இன்று போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.