தமிழ்நாடு

முழுவீச்சில் நடைபெறும் முக்கொம்பு அணை சீரமைப்பு பணிகள்

webteam

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் இரும்புத்தகடுகள் வைத்து தடுப்புகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது, திருச்சி முக்கொம்பிற்கு வந்து, அங்கிருந்து காவிரி ஆற்றில் கல்லணைக்கு செல்கிறது. ஒரு லட்சம் கனஅடி வரை தண்ணீர் வரும்போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடம், காவிரி என இரு வழிகளில் நீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சுமார் 2 லட்சம் கனஅடி வரை நீர் வந்ததால், முக்கொம்பில் உள்ள 45 மதகுகளில், 9 மதகுகள் உடைந்தன. 

இதையடுத்து சுமார் 39 கோடி செலவில், முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் தற்காலிக தடுப்புகளாக இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்டன. தற்போது மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரும்புத்தகடுகளை கொண்ட தடுப்புகளுக்கு கான்கிரீட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சுமார் 150 தொழிலாளர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பணிகள் வரும் 17ஆம் தேதிக்கு முன்னதாக முடிக்கப்படும் என்றும், அதற்கு முன் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவசர அவசரமாக போடப்படும் தற்காலிக தடுப்புகளின் உறுதித்தன்மை குறித்து விவசாய அமைப்புகள் கேள்வி எழுப்பி‌யுள்ளன.