தமிழ்நாடு

மாரத்தான் போட்டியில் மோசடி : மாணவர்கள் புகார்

மாரத்தான் போட்டியில் மோசடி : மாணவர்கள் புகார்

webteam

திருச்சியில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெற்றி பெற்ற மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாராத்தான் ஓட்டம் திருச்சியில் நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே நடத்தப்பட்ட இப்போட்டியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 21 கி.மீ ஓட்டத்தில் ஜோஸ்வா, ராஜராஜன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கஸ்தூரி, கிருத்திகா ஆகியோரும் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதேபோன்று 5 கி.மீ பிரிவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற அழகப்பா பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர் லோகேஷ்வரன், தனக்கு அறிவித்தப்படி பரிசுத்தொகையை தராமல் ஏமாற்றிவிட்டதாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ்வரன், “மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களிடம், நுழைவுக் கட்டணமாக ரூ250 முதல் ரூ600 ரூபாய் வரை வசூல் செய்து உள்ளனர். ஆனால் 5 கி.மீ பிரிவில் வெற்றிபெற்ற எனக்கு அறிவித்த பரிசுத் தொகையை மாரத்தான் நடத்தியவர்கள் தரவில்லை. மாரத்தான் என கூறி பணத்தை பறிக்கும் வேலை நடந்து வருகிறது. இதுஉடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விழிப்புணர்வு மாரத்தான் என்றால் பணம் வாங்காமல் அதை நடத்த வேண்டும். இல்லையென்றால் முறையாக பரிசுத்தொகையை அளிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களையும், விளையாட்டையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை தடுக்கவேண்டும்” என்று கூறினார்.  அவருடன் சேர்ந்து அந்த போட்டியில் கலந்து கொண்ட தீபக் என்பவரும் இதே கருத்தையே  வலியுறுத்தினார்.
 
காவல்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் தொடக்கி வைத்து பரிசளித்த மாரத்தான் போட்டி என்பதால், காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துவிட்டதாகவும் அந்த மாணவர்கள் குற்றம்சாட்டினர். முன்னதாக சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும்போது மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்களை குற்றப்பிரிவுக்கு சென்று புகார் அளிக்க திருப்பி அனுப்பினர். இதனால் மாணவர்கள் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.