செய்தியாளர்: சார்லஸ்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்த சிவ பூஜன் சிங் என்பவரின் மகன் மஞ்சித் சிங் (43), கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து பணி மாறுதல் பெற்று திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மஞ்சித் சிங் பெல் நிறுவனத்தின் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி டிப்திசிங், பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 6ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். மஞ்ஜித் சிங் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சி பிட்காயின் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து மஞ்சித் சிங் மன உளைச்சலில் இருந்ததோடு அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற அவர், 4 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சயடைந்த சக ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே மஞ்சித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பெல் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.