தமிழ்நாடு

திருச்சி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவரானார் கடல்மணி

நிவேதா ஜெகராஜா

திருச்சி சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23,998 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79,433 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதில் திருச்சியில் சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கையின்போது, அதில் போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகள் பெற்றுள்ளதும், அவரை எதிர்த்து நின்ற கன்னியம்மாளை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடல்மணி 424 வாக்குகளும் கன்னியம்மாள் 423 வாக்குகளும், மற்றொரு வேட்பாளர் சத்தியநாதன் 137 வாக்குகளும் செல்லாதவையாக 5 வாக்குகளும் பதிவாகியுள்ளன.