விரிசல் ஏற்பட்டிருந்த திருச்சி கொள்ளிடம் பாலம் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நம்பர் 1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்பு பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த பாலம் பலவீனம் அடைந்ததால் நெடுஞ் சாலைத்துறை சார்பில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து பழைய கொள்ளிடம் பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. 23 தூண்களை கொண்ட இந்தப் பாலத் தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டதை கடந்த 15-ம் தேதி பொதுமக்கள் கண்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நேரம் செல்ல செல்ல தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமானது. இதையடுத்து கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது.
நேற்று வெள்ளம் அதிகரித்ததால் கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகரித்தது. இதனால் பாலம் இடிந்து விழும் என்று கருதப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2.05 லட்சம் கனஅடி தண்ணீர் வரை திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று நண்பகல் நிலவரப்படி 1.83 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 1.95 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பவானிசாகர், அமராவதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள் ளதாலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்ததால் பாலம் இரண்டாக உடைந்தது