திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சுரேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தை பரபரப்பாக்கிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் நடந்த வாகன சோதனையில், மணிகண்டன் என்பவர் 4 கிலோ 250 கிராம் நகைகளுடன் திருவாரூரில் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி சுரேஷின் தாயார் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டார். ஆனால் சுரேஷ் தப்பிவித்துவிட்டார்.
பின்னர் அவர்கள் திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சுரேஷ் (28) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் இன்று சரணடைந்தார். இவர் திருவாரூர் மாவட்டம் சிராத்தோப்பு பகுதியை சேர்ந்தவர். இந்தக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.