புற்றுநோய் கட்டி pt desk
தமிழ்நாடு

முதியவரின் கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி - வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்..!

திருச்சியில் முதியவரின் கல்லீரல் மேல் பகுதியில் இருந்த 1.5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை திருச்சி அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: பிருந்தா

திருச்சி மாவட்டம், திருநெடுங்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பல்வேறு பரிசோதனைகளில் அவரின் கல்லீரலின் மேற்பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

புற்றுநோய் கட்டி

இதனைத் தொடர்ந்து இதயம், நுரையீரல், மயக்க மருந்து நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் அளித்த லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் கல்லீரலின் வலது பக்கத்தில் இருந்த கட்டி 60 சதவீதம் கல்லீரலுடன் சேர்த்து அகற்றப்பட்டது. இதயம் வெளியேற்றும் ரத்தத்தில் 25 சதவீதம் கல்லீரலுக்கு செல்வதால் மிகவும் கவனத்துடன் நவீன கருவியை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தலைமையில், துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் மருத்துவர்கள் கண்ணன், ஷங்கர், ராஜசேகரன், கார்த்திகேயன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையில் கல்லீரலின் மேற்பகுதியில் இருந்த 1.5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது.

மனித உடலில் முக்கிய உறுப்பு கல்லீரல் என்பதால் மக்கள் இது தொடர்பான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வைரஸ் பாதிப்பு, அதிகமாக மது அருந்துவது, பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்லீரலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அரசு மருத்துவமனையில் இது தொடர்பான சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதால் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு திருச்சி அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.