சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலைவழக்கு குறித்து திருச்சி டிஐஜி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
கீரனூர் காவல் நிலையத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் படுகொலைக்கு பின்பு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. தனித்தனியாக துப்புகளை சேகரித்ததன் அடிப்படையில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மணிகண்டன், மற்ற இருவரும் சிறார்கள். சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்கள், சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகளைக்கொண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாக பார்க்கவேண்டும். பூமிநாதன் பின்புறத்திலிருந்து தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களின் உடற்கூறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்புறமாக நின்று தாக்கியிருந்தால் தன்னை தடுத்திருக்கலாம். குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் சம்பவத்தின்போது தான் போதையில் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால் அதை உறுதிபடுத்தமுடியவில்லை.
காவல்துறையினர் இரவுநேர ரோந்து பணிகளின்போது பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். காவலர்களது பாதுகாப்பிற்காக ஆயுதங்களுடன் ரோந்து செல்வது குறித்து பரிசீலிக்கப்படும். நீதிமன்றத்தில் சாட்சிகள் சமர்பிப்பதை பொறுத்து அதிகபட்ச தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆயுள்தண்டனையும் மரணதண்டனையும்கூட சாட்சிகளை பொறுத்து குற்றவாளிகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. இரண்டு இளஞ்சிறார்கள் சிறுவர்களுக்கான குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்” என்றார்.