தமிழ்நாடு

திருச்சி: காப்பகங்களில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்

kaleelrahman

திருச்சியில் உள்ள காப்பகங்களில் தங்கியுள்ள சிறுமிகளுக்கு அங்குள்ள பெண்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கும் இல்லங்கள் அமைந்துள்ளன. இதில், திருச்சி மன்னார்புரத்தில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதி உதவியுடனும், மாநில அரசின் சமூகநல ஆணையத்தின் அனுமதியுடனும் தனியார் தொண்டு நிறுவனம் (டி.எம்.எஸ்.எஸ்.எஸ்) பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இங்கு தங்கியிருந்த ஒரு பெண் தப்பியோடிவிட்டார். காப்பக நிர்வாகிகள் தங்களை கொடுமைப்படுத்துவதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் அகிலா விசாரணை நடத்திவருகிறார்.

இந்நிலையில், பெண்கள் காப்பகங்கள் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில் பாதிப்புக்கு உள்ளான சிறுமிகள் பெண்கள் காப்பகத்திற்கு புதிதாக வரும்போது, அச்சிறுமிகளை காப்பகத்தில் தங்கியுள்ள சில பெண்கள் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், காப்பகத்தில் தங்கியுள்ள பொண்களுக்கு மாதவிலக்கின் போது போதுமான மருத்துவ உதவிகள் நாப்கின் போன்ற பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், சத்தான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்றும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறையைச் சேர்ந்த பெண்கள் நலக்குழுவினர், காப்பகங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமீமுனிசா, மாநில குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அலுவலர் முரளிக்குமார் உள்ளிட்டோர் விசாரணை அதிகாரிகளாக இடம்பெற்றிருந்தனர்.