தமிழ்நாடு

திருச்சி பா.ஜ.க பிரமுகர் கொலையில் வேறு எந்த சாயமும் இல்லை - காவல் ஆணையர் விளக்கம்

திருச்சி பா.ஜ.க பிரமுகர் கொலையில் வேறு எந்த சாயமும் இல்லை - காவல் ஆணையர் விளக்கம்

webteam

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து திருச்சி காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், வரகனேரி, பென்சனர் தெருவைச் சேர்ந்த, பாலக்கரை பகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த விஜயரகு, கடந்த 27 ஆம் தேதி காந்தி சந்தையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாபு (25), ஹரிபிரசாத்(20) ஆகியோரை சென்னை பூக்கடையில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமறைவாக இருந்த திருச்சியைச் சேர்ந்த சுடர் வேந்தன்(18), சச்சின் (18), முகமது யாசர் (18) ஆகியோர் திருச்சி சஞ்சீவி நகரில் இன்று அதிகாலை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “விஜயரகுவை கொலை செய்ய ஐந்து பேரும் சேர்ந்து, காந்தி சந்தை வாழைக்காய் மண்டியில் திட்டமிட்டுள்ளனர். பாபு, ஹரிபிரசாத் ஆகியோர் நேரடியாக கொலையில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மூவரும் அவர்களுக்கு உதவியுள்ளனர். கொலைக்கு பிறகு பாபு, ஹரிபிரசாத் ஆகியோர் தஞ்சை, நாகை சென்று பின்னர் சென்னைக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

பாபு மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அதில் விஜயரகுவின் மைத்துனர் கிருஷ்ணகுமார், விஜயரகு ஆகியோரை தாக்கிய வழக்கும் உள்ளது. இதில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் வெளியே வந்துள்ளார் பாபு. ஏற்கெனவே இருந்த தனிப்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 27ம் தேதி காலை 6.15 மணியளவில் இருசக்கர வாகன கட்டண வசூல் பணியில் இருந்த விஜயரகுவை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த கொலைக்கு லவ் ஜிகாத் காரணமாக இருக்கலாம் என்று தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “தனிப்பட்ட முன் விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. மற்றபடி வேறு காரணம் இல்லை. வேறு சாயமும் இல்லை” என்று காவல் ஆணையர் உறுதிப்படத் தெரிவித்தார்.