தமிழ்நாடு

திருச்சி: நிதி நிறுவனம் பெயரில் பலகோடி மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

kaleelrahman

திருச்சியில் தனியார் நிதி நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் உள்ள எல்ஃபின் என்ற தனியார் நிதி நிறுவனம், அறம் மக்கள் நல சங்கம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திவந்தது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளனர். இதையடுத்து பணத்தை வசூலித்துக்கொண்டு, அதன் உரிமையாளர்களான ராஜா மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

இவர்கள் இருவரையும் கைது செய்து, இழந்த பணத்தை பொதுமக்களுக்கு மீட்டுத் தர வேண்டுமென வலியுறுத்தி, திருச்சி நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் மாநகர காவல் துணை அணையர் முத்தரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.