Bharathidasan university
Bharathidasan university pt desk
தமிழ்நாடு

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு மார்க் குளறுபடி – ஒற்றை இலக்கத்தில் வந்த மதிப்பெண்!

webteam

செய்தியாளர்: பிருந்தா

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த நவம்பர் மாதம் பருவத் தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்லா துறைகளிலும் குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் மட்டும் அனைத்து மாணவர்களும் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக தேர்வு முடிவுகள் வந்துள்ளது.

மார்க் குளறுபடி

அதேபோல் மற்ற பாடங்களில் அதிகமான மதிப்பெண் எடுத்த மாணவர்களும், குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வியை தழுவியுள்ளனர். சில மாணவர்கள் தேர்வெழுதிய நிலையிலும், அவர்கள் தேர்விற்கு வரவில்லை என பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகள், மதிப்பெண் சரிபார்ப்பு தொடர்பாக பல்கலைக் கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘நிதி சுமையை சரி செய்ய மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணம் வசூல் செய்யும் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறதா’ என்ற விமர்சனத்தையும் கல்வியாளர்களும் மாணவர் சங்கமும் முன்வைக்கின்றனர்.

exam result

தேர்வு முடிவில் கணினியில் ஏதேனும் தவறு ஏற்பட்டுள்ளதா, தவறு ஏற்பட யார் காரணம் என்பதை கண்டறிவதுடன், இத்தகைய இடரை சரி செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.