தமிழ்நாடு

ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பு : பழங்குடியின மக்கள் வேதனை

ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பு : பழங்குடியின மக்கள் வேதனை

webteam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமரணை பழங்குடியின மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் அரசின் திட்டங்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி அடுத்த ராமரணை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள தலமலை சாலைக்கு நடந்து தான் செல்ல வேண்டும். வழிநெடுங்கிலும் கரடி, சிறுத்தை உலாவுவதால் ஆபத்தான பயணத்தை தவிர்க்க, குழுவாக செல்வது கிராமமக்களின் வழக்கமாக உள்ளது. இக்கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே காட்டாறு செல்கிறது. மழை காலங்களில் காட்டாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் அக்கிராம மக்க: மழைக்காலங்களில் கிராமத்திலே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.

ராமரணை கிராமத்தில் இருந்து 15 குழந்தைகள் தலமலை ஊராட்சி நடுநிலை பள்ளிக்கு செல்கின்றனர். இக்கிராமத்தில் இருந்து போதிய பேருந்து வசதியில்லாத காரணத்தால் குழந்தைகள் பள்ளியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி பயின்று வருகின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு அவர்களை பெற்றோர்கள் கிராமத்துக்கு அழைத்து வருவார்கள்.  இந்நிலையில் இக்கிராமக்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் அரசின் சலுகைகள் பெறுவதற்கும் பழங்குடியின ஜாதி சான்றிதழ் அவசியமாக உள்ள நிலையில் இவர்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கப்படவில்லை.


பழங்காலத்தில் இருந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தங்களுக்கு பழங்குடியின சான்றிதழ் தர மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஜாதிச்சான்றிதழ் பெறமுடியாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்க்கை முறையை நேரில் ஆய்வு செய்து பழங்குடியின சான்றிதழ் வழங்கவேண்டும் என்றும் சாலையை சீரமைத்தும் உயர்அழுத்த மின்சாரம் வழங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்ள உதவ வேண்டும் எனவும் இக்கிராமமக்கள் தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.