திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே மோரை ஜெ.ஜெ நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியினத்தில் சோழகன் என்ற வகுப்பைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள், சாட்டை அடித்து யாசகம் கேட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
பழங்குடியின மக்களாக நாங்கள் இருந்தாலும், எங்களுக்கு அதற்கான சான்று வழங்கப்படாமல் இருக்கிறது. இதனால் சாதி சான்று இல்லாமல் எங்கள் பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க முடியவில்லை.பாதிக்கப்பட்டவர்கள்
‘ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வழங்கியுள்ள அரசு, மற்ற தேவைகளை பூர்த்தி செய்யவில்லை’ என வேதனை தெரிவிக்கிறார்கள் இவர்கள்.
பாழடைந்த குடிசை கொட்டைகையில் வசித்து வரும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை என சொல்கின்றனர். காடு போன்ற சூழலில் வசித்து வருவதால் பெரும்பாலான நேரங்களில் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தங்கள் சாட்டை அடி தொழிலுக்கு கூடவே அவர்களையும் அழைத்துச் செல்கின்றனர். இதன்விளைவாக கடந்த மாதம் 6 வயது சிறுமியை, குழந்தைகள் நலத்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு அதன்பின் சரியாக தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையை தேடி பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர் இம்மக்கள். கடைசியில், முகப்பேரில் உள்ள காப்பகத்தில் குழந்தை இருப்பது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு சென்று குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். அப்போது காப்பகத்தினர் குழந்தையை காண பிறந்த சான்று மற்றம் ஆதாரை காண்பித்து குழந்தையை பெற்றுச் செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், பழங்குடி மக்களான இவர்களிடம் எந்தவொரு ஆவணமும் இல்லாததால் குழந்தையை இப்போதும் மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்...
“எங்கள் சமூகத்தில் பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் பிறந்த குழந்தைகள் தான். அவர்களுக்கு பிறந்த சான்று கிடையாது. அதேபோல் பிறந்த சான்று இல்லாததால் ஆதார் கார்டும் வாங்க முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். எங்களிடம் குழந்தையை திருப்பி தரவும் மறுக்கிறார்கள். நீதிமன்றம் மூலம் நிரூபித்து எங்கள் குழந்தையை பெற்றுக் கொள்ளும்படி கூறுகிறார்கள். படிப்பறிவு இல்லாத நாங்கள் எப்படி குழந்தையை மீட்பது என்று தெரியவில்லை. குழந்தையை பிரிந்து கடந்த ஒருமாத காலமாக தவித்து வருகிறோம்” என்று வேதனை தெரிவிகின்றனர்.
இதுகுறித்து அம்மக்களின் தலைவரொருவர் கூறுகையில், “சாதி சான்று, ஆதார் போன்ற அரசு திட்டங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்காததால் பல்வேறு வகையில் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
எங்கள் குலத்தொழில் சாட்டை அடித்து யாசகம் செய்வது தான். இதைவிட்டு நாங்கள் வெளியே வர அரசு தங்களுக்கு உதவ வேண்டும்.
நாங்கள் திருடவில்லை, கொள்ளை அடிக்கவில்லை. எங்கள் மீது இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் இல்லை. எங்கள் உடலை வருத்தி அதன் மூலம் யாசகம் செய்து வருகிறோம். இந்த நிலை எங்கள் அடுத்த தலைமுறைக்கு வர வேண்டாம் என்று நினைத்து எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும், எங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த திட்டமும் கிடைக்காமலேயே இருக்கிறது. இதனால் பிள்ளைகளின் கல்வியும் தடைபடுகிறது.பாதிக்கப்பட்டவர்கள்
இதற்கு முக்கிய காரணம் சாதிச்சான்று. எங்கள் மொழி, வாழ்வியல், குலத்தொழில் அனைத்தும் எங்கள் பழங்குடியின மூதாதையர் வழி வந்தது. இதுநாள் வரை அப்படியே இருக்கும் சூழலில் எங்களுக்கு எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பிழைப்பு தேடி சென்றால், எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும், பட்டினியாக இருக்கக் கூடாது என்பற்காகவும் அவர்களையும் கூடவே அழைத்துச் செல்ல வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். ஆனால் அங்கும் வந்து, ‘இந்த குழந்தைகள் உங்கள் குழந்தையா?’ என கேட்டுவிட்டு, நாங்கள் அவர்களை துன்புறுத்துவதாக நினைத்து பிடித்து செல்கின்றனர். அப்படி அவர்கள் பிடித்துச் சென்ற குழந்தையை, ஒரு மாதமாகியும் மீட்க முடியாமல் தவித்து வருகின்றோம்” என்றார்.
தலைமுறை தலைமுறையாக சாட்டை அடித்து யாசகம் செய்து வரும் நிலை மாறி அடுத்த தலைமுறை பிள்ளைகளாவது படித்து முன்னேறி நல்ல பணி செய்ய வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு உருக்கமாக கோரிக்கையும் விடுத்துள்ளனர்.