தமிழ்நாடு

விதிகளை மீறும் பயண ஏற்பாட்டாளர்கள் !

விதிகளை மீறும் பயண ஏற்பாட்டாளர்கள் !

காடுகளுக்கு மலையேற்றம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஏற்பாட்டாளர்கள் விதிகளை மீறுவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கி்ன்றனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 21 பேரை மீட்கும் பணி விடியவிடிய நடைபெற்று வருகிறது.

காடுகளுக்கு மேலையற்றம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பல தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முறையாக வனத் துறை அனுமதி பெற்று, ஏற்கெனவே மலையேற்றம் பயிற்சி மேற்கொண்டவர்களை அழைத்துச் செல்கிறது. பணம் வசூலிப்பதை மட்டுமே குறிக்கோளாக நினைக்கும் சில நிறுவனங்கள் மலையேற்றத்துக்கு குடும்பத்துடன் வரலாம் என பொறுப்பே இல்லாமல் அறிவிக்கிறது. இதில் மலையேற்றத்துக்கான கட்டணத்தை வசூலித்த பின்பு, இப்படியாக விளம்பரங்களும் செய்கின்றன "நாங்கள் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம், கிடைக்கவில்லை என்றால் மாற்று வழிகளில் அழைத்துச் செல்வோம்" என தெரிவிக்கிறது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு சில நேரங்களில் காடுகளுக்கு மலையேற்றம் செல்பவர்கள் இறந்தும் போயுள்ளதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.