பழைய விஜயகாந்த் மீண்டும் நிச்சயம் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தேமுதிக சார்பாக நடைபெற்ற மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அக்கட்சியைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரேமலதா பேசும்போது, “திருப்பரங்குன்றம் ராசியான இடம். எம்.ஜி.ஆர் 1973 இல் முதல்முறையாக கூட்டம் நடத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல்வரானார். அதுபோல விஜயகாந்த்தும் மதுரையில் கட்சியை தொடங்கி இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். எனவே நீங்கள் எண்ணும் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். மதுரையின் மருமகளாக உங்கள் வீட்டு பெண்ணாகவே பேசுகிறேன்.
விஜயகாந்த் வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போட்டே வென்றவர். துரோகம், சூழ்ச்சி இவற்றை வென்று எதிர்நீச்சல் போட்டு வென்றவர். விஜயகாந்த் பழைய கம்பீரத்தோடு சிங்கம் போல் நடந்து வந்து வெற்றி உரையை நிகழ்த்துவார். என் தாலி பாக்கியம் நிச்சயம் அதை நடத்திக்காட்டும். தொண்டர்களின் பிரார்த்தனை அதை நிறைவேற்றித் தரும். விஜயகாந்த் கருப்பு, நாங்களும் கருப்பு அவரும் எங்கள் வீட்டுப்பிள்ளை என தமிழக மக்கள் கூறுகிறார்கள். பழைய விஜயகாந்த் நிச்சயம் அவர் வருவார். எனக்கு நம்பிக்கை உள்ளது.
பெண்கள் எல்லாத்துறைகளிலும் சாதனை படைப்பது போல அரசியலிலும் பெண்கள் சாதனை படைக்க வேண்டும். அரசியலுக்கு பெண்கள் அவசியம் வர வேண்டும். 2021க்கு அதிக காலம் இல்லை. எல்லோரும் விழிப்போடு இருக்க வேண்டிய தருணம் இது. சிந்தித்து வாக்களிக்க வேண்டும் மக்கள்.
கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே முதல்வர் ஆனார். ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த்தை முதல்வராக்கும் வாய்ப்பை தவறவிட்டது தமிழக மக்கள்தான்.டிக்டாக்கில் எந்தச் சகோதரிகளும் பங்கேற்க வேண்டாம். பெண்கள் கலாச்சாரத்தின் பொக்கிஷம் பெண்கள். தமிழகப் பெண்கள் கெளரவமானவர்கள். ஆபத்தை விளைவிக்கும் டிக்டாக்கை தமிழக பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும். விஜயகாந்த் திரைப்படத்தில் பெண்களோடு கண்ணியமாக நடிக்கக்கூடியவர்.தூய வாழ்க்கை நடத்தியவர்” என்றார்.