தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு இனி தனியாருக்கு கிடையாது: டிஆர்பி

ஆசிரியர் தேர்வு இனி தனியாருக்கு கிடையாது: டிஆர்பி

webteam

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு முறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) பதில் அளித்துள்ளது.

தமிழ்நாடு தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் பணி நியமன போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அண்மையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டில், பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணி பெற முயல்பவர்களின் தேர்வு எழுதும் விடைத்தாள்கள் தனியாக குறியிடப்பட்டு, தேர்வு முடிந்த 2 நாட்களில் அதற்கான தரகர்கள் மூலம் சரியான விடைகள் குறிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தத்திற்கு செல்வது குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், இதுபோன்று முறைகேடாக 270 முதல் 280 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த நிகழ்வை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன் வந்து விசாரிக்கிறது. இதில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பிலிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் “இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுகள் தொடர்பான நடவடிக்கைகள் தனியாருக்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் டிஆர்பி அலுவலகத்திற்குள் நுழைவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பயோமெட்ரிக் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.