மேற்குவங்கத்திற்கு மிதிவண்டியில் புறப்பட்ட வடமாநிலத்தவர்களை காஞ்சிபுரம் அருகே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு வரை நடந்து சென்று புதிய மிதிவண்டிகளை வாங்கியுள்ளனர். மிதிவண்டிகளை வாங்கிய அவர்கள் காஞ்சிபுரம் நோக்கி மேற்குவங்கம் புறப்பட்டப்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், பழைய சீவரம் பகுதியில் அவர்களை தடுத்தி நிறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸிடம் தொலைபேசி வாயிலாக பேசிய அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஆம்பன் புயல் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்த வெளிமாநிலத்தவர்களை செங்கல்பட்டில் முகாமில் தங்க வைத்துள்ளோம் என்றும் கூறினார். மேலும் அவர்களுடன் இவர்களையும் தங்க வைத்து ஓரிரு தினங்களில் ரயில் மூலம் சொந்த ஊக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.