புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியினையும் சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொரோனோ தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் உட்பட 46 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அரசு போக்குவரத்துக் கழக கிளைகளில் பணியாற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கலைவாணி பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு புதிய விதிமுறைகளை பின்பற்றி 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து போக்குவரத்துக் தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துறை பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். தொடர்ந்து நாளையும் தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.