போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண சென்னையில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பள்ளி வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதில், அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20,700 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மாநிலம் முழுவதும் 1.43 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வேண்டும், பணபலன்களில் பிடித்தம் செய்த ரூ.7,500 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதால் ஊதிய உயர்வு வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.