சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று பிற மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், 8 முறை போக்குவரத்து அமைச்சர் பங்கேற்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தும் பலனில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பு நிதி 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் கூறுகின்றனர். எனவே முதலமைச்சர் தலையிட்டு பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணவேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.