தமிழ்நாடு

பூண்டி ஏரி நீரால் மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

Sinekadhara

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அதன் கீழே கொசஸ்தலை ஆற்றில் செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தும் அதில் குளித்தும் வருகின்றனர்.

புயல் மற்றும் கனமழை நாட்களில் சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் வழக்கமான வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தரைப்பாலம் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் தற்போது 2886 மி.கன அடியும், மொத்த உயரமான 35 அடியில் 34 அடி தண்ணீரும் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 3167 கன அடியாக உள்ளநிலையில், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3907 கன அடியாக உள்ளது. கடந்த 27-ஆம் தேதி பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

தற்போது 7 மதகுகளின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் அணையின் அருகே உள்ள தரைப்பாலம்தான் நம்பாக்கம், ராமஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியாக உள்ளது. தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தரைப்பாலம் உபரி நீரால் மூழ்கியுள்ளது. ஆனால் பொதுமக்கள், தரைப்பாலத்தில் குளித்தும் அந்தப்பகுதியில் ஆற்றைக் கடந்தும் வருகிறார்கள். இதனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் தரப்பில் தண்ணீர் திறப்பதற்கு முன்பும், பின்பும் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாம், ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனையும் மீறி அந்த தரைப்பாலத்தில் குளித்து வருவதால் உயிரிழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.