தமிழ்நாடு

”நாங்களும் சாதிப்போம்” - தடைகளைத் தாண்டி அரசியலில் தடம் பதிக்கும் திருநங்கைகள்- ஓர் பார்வை

Sinekadhara

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சியினர் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் 360 நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம். 

சக மனிதர்களாகிய எங்களை ஏன் இந்தச் சமூகம் புறக்கணிக்கிறது? இதுதான் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் கேள்வி. ஆனாலும் தடைகளை எல்லாம் தாண்டி இன்று காவல் துறை, நீதித்துறை என பல்வேறு துறைகளில் தடம் பதித்திருக்கிறார்கள் இவர்கள். நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்திருப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில் போட்டியிட திருநங்கை கங்காவுக்கு வாய்ப்பளித்திருக்கிறது திமுக. மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக, சென்னையின் 112 ஆவது வார்டில் போட்டியிட திருநங்கை ஜெயதேவிக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தனித்துப் போட்டியிடும் பாஜக சார்பாக சென்னையின் 76 ஆவது வார்டில் திருநங்கை ராஜம்மாவும் மதுரை மாநகராட்சியின் 94 வது வார்டில் திருநங்கை சுஜாதாவும் தேர்தல் களம் காண்கிறார்கள்.

இப்படி பலருக்கும் கட்சிகள் வாய்ப்பளித்திருப்பதால் வரும் காலங்களில் திருநங்கைகளின் பங்களப்பு இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் களம் காணும் வாய்ப்பால், திருநங்கைகள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வும் மலர்ந்திருக்கிறது.