தமிழ்நாடு

தனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் திருநங்கைகள்

தனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் திருநங்கைகள்

webteam

திருநங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட கல்வியும், வேலைவாய்ப்புமே சிறந்த வழி. அதற்கு உதாரணமாக, தனியார் டாக்ஸி நிறுவனம் ஒன்று, 27 திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து, அவர்களது வாழ்வில் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

’திருநங்கைகள்’என்ற இந்த வார்த்தைகள் சமூகத்தில் இரண்டற கலந்த ஒன்று தான். ஆனால். அவர்களுக்கு கிடைத்திருக்கும் வேலை வாய்ப்பு என்ற சாதாரண நிகழ்வு இன்றளவும் செய்தியாக பார்க்கப்படுவது, நிலைமை மாறவில்லை என்பதேயே உணர்த்துகிறது. சமூகத்தில் திருநங்கைகளும் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிக முனைப்பு காட்டி வருகிறது அரசு சாரா நிறுவனம் ஒன்று. 
அந்த நிறுவனத்தின் முயற்சியால் தனியார் டாக்ஸி நிறுவனம் ஒன்று அதனை விளம்பர படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் திருநங்கைகளின் கைகளில் ஒப்படைத்து இருக்கிறது. திருநங்கைகளுக்கு பகுதி நேரமாக கொடுத்திருக்கும் வேலையை விரைவில் நிரந்தரமாக்க முயற்சிப்பதாக உறுதியளிக்கும் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீனிவாசன், திருநங்கைகளின் தற்போதைய நிலை மாற, வேலை வாய்ப்பே ஒரே வழி என்கிறார்.

இந்த அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த திருநங்கை மலாய்கா, இன்று தாங்கள் வேலை பார்க்க தொடங்கி இருக்கும் நிறுவனத்தை போலவே விரைவில் திருநங்கைகள் இனணந்து புதிய நிறுவனம் தொடங்குவோம் என்று நம்பிக்கை விதைகளை தூவும் வகையில் பேசுகிறார். இது தான் எங்கள் சமூகம் என்று ஏற்று கொண்ட திருநங்கைகளை இந்த சமூகம் ஏற்று கொண்டு அவர்களுக்கு இன்னும் பல வேலை வாய்ப்புகளை தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.

ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களுக்காகவும் அனைத்து நிறுவனங்களின் வாசற்கதவுகள் இனி வரும் காலங்களில் திறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் திருநங்கைகள்.