தமிழ்நாடு

செல்போன், ஹெட்போனால் அதிகரிக்கும் விபத்துகள்!

செல்போன், ஹெட்போனால் அதிகரிக்கும் விபத்துகள்!

webteam

சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றோ அல்லது கவனக் குறைவினாலோ இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதத்துக்குள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 248 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த வருடம் முதல் 4 மாதத்தில் 329 பேர் பலியாகியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மின்சார ரயில்களில் நாள்தோறும் குறைந்தது 3 பேர் ரயிலில் அடிப்பட்டு இறப்பது தெரியவந்துள்ளது. ரயில் விபத்தில் பலியானோர் பெரும்பாலும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தான் என ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர். 
தண்டவாளத்தை கடக்கும்போது செல்போன் பேசிக்கொண்டு நடப்பதாலும், காதில் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டே நடப்பதாலும், சிலர் தானாகவே தற்கொலை எண்ணத்துடன் ரயிலில் அடிப்படுவது தெரியவருகிறது.

எழும்பூரில் கடந்த 4 மாதத்தில் 45 பேரும், தாம்பரம் பகுதியில் 44 பேரும், செங்கல்பட்டு பகுதியில் 32 பேரும், சென்ட்ரல் ரயில்நிலைய பகுதியில் 30 பேரும், கொருக்குபேட்டை பகுதியில் 45 பேரும், பெரம்பூர் பகுதியில் 30 பேரும், திருவள்ளூர் பகுதியில் 17 பேரும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக ரயில்வே போலீசார் அளித்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது