சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில், குட்கா பொருள் பயன்படுத்தியதாக மாணவர் மீது குற்றஞ்சாட்டியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகாரளித்துள்ளார்.
சென்னை சின்ன நீலாங்கரையை சேர்ந்த மகேஷ் என்பவரின் இரண்டாவது மகன் தர்ஷன். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். கடந்த மாதம் 29 மற்றும் 30-ம் தேதி கவின்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடந்த டிச.1-ல் கவின்குமாரின் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவர், காரணமேதும் சொல்லாமல் கவின்குமாரை மற்ற மாணவர்கள் மத்தியில் அடித்து வகுப்பறையை விட்டு வெளியே இழுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே முன்பொருமுறை தர்ஷனை தாக்கிய விவகாரத்தில், அவரது தந்தை மகேஷ் பள்ளி நிர்வாகத்திடம் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் மீது புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது. இருந்தபோதிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் கவின்குமாரை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பள்ளியின் முதல்வர் சீசர் மற்றும் ஆசிரியர் செல்லபாண்டி ஆகியோர் மேலும் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி மாணவன் கவின் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கு காரணமான பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தற்போதைக்கு உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் செல்லபாண்டியை கைது செய்யவில்லை என்றும், தங்கள் மகன் தற்கொலைக்கு காரணமான அவர்களையும் கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.