தமிழ்நாடு

குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு - உலக தற்கொலை தடுப்பு தினத்தில் நிகழ்ந்த சோகம்

குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு - உலக தற்கொலை தடுப்பு தினத்தில் நிகழ்ந்த சோகம்

webteam

நாமக்கல் அருகே தனது 3 வயது ஆண் குழந்தையை மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் அடுத்த புதன்சந்தை கொண்டம நாயக்கனூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்தாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி கீதாவும் 3 வயது மகன் வில்வின் யாதவும் வளையபட்டியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கொண்டம நாயக்கனூரில் பண்டிகைக்காக கணவரின் ஊருக்கு கீதாவும் அவரது மகனும் நேற்று வந்துள்ளனர். கணவர் ஊருக்கு ஓராண்டுக்கு பின் வந்த கீதா கணவரின் நினைவாக துக்கத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவரது விவசாய கிணற்றில் கீதா தனது மகனை துப்பட்டாவால் மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருவரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.