தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்பு பகுதிகளில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளது. இதனால் பலர் தங்களின் வாழ்வை இழந்துள்ளனர். அப்பைட் விழுப்புரத்தில் தன் மகளை இழந்த சில நாட்களிலேயே அவள் நினைவாக வைத்திருந்த அனைத்தையும் வாரிச்சென்ற பெருவெள்ளத்துயரில் தவிக்கும் ஒரு தாயின் சோகத்தை பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு.
பல தலைமுறைகளாக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சொந்த வீட்டில் வசித்து வந்தும், இதுவரை இப்படியொரு வெள்ளத்தை கண்டதில்லை என்கிறார் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராதா.
கணவனைப் பிரிந்த ராதா அரகண்டநல்லூர் பகுதியில் வீட்டிலேயே இட்லி கடை, கயிறு திரித்தல் தொழிலைச் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். வறுமையால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் சில நாட்களுக்கு முன்பு இவரது மகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
வாழ்வில் பட்ட அந்தப் பெரும் ரணம் சற்றும் ஆறாத நிலையில், தென்பெண்ணை ஆற்றின் பெருவெள்ளம் ராதாவின் வீட்டையும் வாழ்வாதாரத்தையும் சூறையாடிச் சென்றுள்ளது. மகளின் நினைவாக வைத்திருந்த பொருட்கள் கூட மிஞ்சாத அளவில் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் தவிக்கிறார் ராதா. மகளைத் தொடர்ந்து வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்த இவருக்கு தற்போதைய ஒரே ஆறுதல் அவர் வளர்த்து வரும் அந்த செல்லப்பிராணி மட்டுமே. ‘உங்களுக்காக இருக்கிறோம்’ என்பதை தவிர, அவரிடம் சொல்ல நமக்கும் எந்த ஆறுதலும் இல்லை என்பதே நிதர்சனம்!