சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி ‘டுவிட்டரில்’ தகவல் தெரிவிக்கலாம் என்றும், அந்த தகவல் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் தென்சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா,
"தென்சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தென்சென்னையில், குறிப்பாக அடையார், கோட்டூர்புரம் பகுதியில் அதிகமான வாகனங்கள் சாலைகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கியமான நேரத்தில் நானே நேரடியாக சென்று சாலைகளில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணித்து வருகிறேன். ‘சென்னை டிராபிக் அலர்ட்’ என்ற பெயரில் ‘டுவிட்டரில்’ ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்து நெரிசல் பற்றி தகவல் தெரிவிக்கலாம். அதை கண்காணிப்பதற்கு எனது அலுவலகத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் வரும் தகவல் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் அதில் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் பற்றி ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும். சென்னை நகரில் 113
சிக்னல்கள் ‘வார்தா’ புயலினால் பெரிதும் பழுதாகி இருந்தன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து வருகிறோம். புதிதாக 45 இடங்களில் சிக்னல் அமைக்கும்
பணி நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரெயில் பணியால் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சிக்னலில் இருந்து நேரு பூங்கா வரையிலும், சேத்துப்பட்டு ராமநாதன் சாலை,
மெக்னிக்கல் சாலை ஆகியவற்றில் தற்போது ஒருவழி பாதை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒரு வழிப்பாதை முறை இந்த பகுதியில்
இருவழி பாதையாக செயல்படத் தொடங்கும். சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.