ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தினர். 21 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீசார் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அலங்காநல்லூர், பாலமேட்டில் போக்குவரத்து நிறுத்தம்