தமிழ்நாடு

“ஓர் ஆண்டில் 27 கோடி ரூபாய் அபராத தொகை வசூல்” - சென்னை காவல்துறை

“ஓர் ஆண்டில் 27 கோடி ரூபாய் அபராத தொகை வசூல்” - சென்னை காவல்துறை

webteam

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் 27 கோடி ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூல் செய்கின்றனர். ஒருமுறை அபராதம் வசூல் செய்வதால் வாகன ஓட்டிகள் மீண்டும் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நோக்கில் அபராதம் வசூல் செய்யப்படுகிறது.

தலைக்கவசம் அணியாமல் வண்டிகள் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, நோ பார்க்கிங், சிக்னலில் நிற்காமல் செல்வது, எதிர்த்திசையில் வாகனங்களை இயக்குவது, ரேசில் ஈடுபடுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற சம்பவங்களுக்கு ஏற்ப அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 கோடியே 21 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்களிடமிருந்து 4 கோடியே 64 லட்சம் ரூபாயும், நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தியதற்காக 3 கோடியே 33 லட்சம் ரூபாயும் அபராதம் பெறப்பட்டுள்ளது.

சிக்னலில் நிற்காமல் சென்றவர்களிடமிருந்து 2 கோடியே 92 லட்சம் ரூபாயும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதற்காக 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் அபராதமும்,  மற்ற பல விதிமுறை மீறலுக்கும்  அதற்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.