மதுரையில் குடித்துவிட்டு இருசக்கரவாகனம் ஓட்டிச் சென்ற நபருக்கு, போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 500 ரூபாய் கூடுதலாக வேண்டுமென கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து தலைமைக்காவலர் அரிச்சந்திரன் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, குடித்துவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு அபராதத் தொகையுடன், கூடுதலாக 500 ரூபாய் கேட்டதாக தெரிகிறது. கூடுதல் தொகை எதற்கு எனக்கேட்ட வாகன ஓட்டியிடம், கூடுதல் தொகையை கொடுத்தால்தான் அசல் வாகன உரிமம் கிடைக்கும் என காவலர் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து அரிச்சந்திரனிடம் கேட்டபோது, வாகன உரிமம் இல்லாததற்கும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கும் சேர்த்து நீதிமன்றத்தில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இங்கே வாகன உரிமம் இல்லாததற்கு 500 ரூபாய்க்கு இ- ரசீது வாங்கிக் கொண்டால் அவ்வளவு தொகை கட்ட தேவையில்லை என்ற நல்ல எண்ணித்தில்தான் அவ்வாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையரிடம் கேட்டபோது, இந்த வீடியோ குறித்து விசாரித்து வருவதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், வீடியோவை வைத்து மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.