போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கிளம்பிய மக்கள்.. போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது தாம்பரம்

PT WEB


தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுப்பதால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

சென்னையில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளனர். இதன்காரணமாக தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அத்துடன் தீபாவளியையொட்டி புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் கடை வீதிகளை நோக்கி
படையெடுத்தனர். இதன்காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று மாலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மெல்ல மெல்ல சென்றதால் பலர் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்ல தொடங்கி உள்ளதால், செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை கட்டுக்குள் கொண்டுவர, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்
செல்ல தனி பாதை அமைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சாலையில் பாலாற்று பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.