தமிழ்நாடு

செங்கல்பட்டு பரனூர் வழியாக சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? மக்களே உஷார்!

webteam

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அணிவகுத்து செல்லும் வாகனங்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தங்கி பணியாற்றி வரும் , பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் நேற்று மாலை 6 மணியிலிருந்து கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து சென்றது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை முதலே, பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காலை வேலை என்பதால், கார்களில் தென் மாவட்டத்தை நோக்கி பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அதிக அளவு கார்கள் குவிந்ததால், பரனூர் சுங்கச்சாவடியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை முதலே பேருந்துக்காக பொதுமக்களும் காத்திருக்கின்றனர். இன்று மாலையும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே ஊருக்கு செல்வோர் அல்லது வார விடுமுறையையொட்டி வெளியே செல்வோர் சரியாக நேரத்தை திட்டமிட்டு அதற்கேற்றபடி செயல்படுவதே நல்லது.