தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசல்: மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை தொடங்க கோரி வழக்கு

போக்குவரத்து நெரிசல்: மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை தொடங்க கோரி வழக்கு

kaleelrahman

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை தொடங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'மதுரை மாநகர் தற்போது திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகள் விரிந்து காணப்படுகிறது. பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும். மதுரையில் 'மெட்ரோ ரயில் திட்டம்' வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த 2வது பெரிய மாநகர பெருமைக்குரியதாக மதுரை இருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக போக்குவரத்து நெருக்கடியாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மதுரையில் இத்திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருகிறது. எனவே, மதுரை போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல்படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.