தமிழ்நாடு

பாரம்பரிய திருமணம்...மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம்

webteam

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருமணம் முடிந்து வீட்டிற்கு மணமக்கள் மாட்டு வண்டியில் சென்றது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். விவசாயியான இவர் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். நாட்டு மாடுகள் மீது அதிக ஆர்வம் கொண்ட பிரவீன்குமார், மக்களிடம் நாட்டு மாடுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீமதி எனும் பெண்ணை காஞ்சிகோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர், நாட்டு மாடுகள் பூட்டிய வண்டியில் 5 கிலோ மீட்டர் தூரம் தனது வீடுவரை பயணித்தார். பெரும்பாலும், அலங்கரிக்கப்பட்ட காரில் மணமக்கள் செல்வது வாடிக்கையாகி உள்ள இக்காலத்தில் மாட்டு வண்டியில் சென்ற மணமக்களை பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.