திருத்துறைப்பூண்டியில் இன்றும், நாளையும் பாரம்பரிய மிக்க நெல் திருவிழா நடைபெறுகிறது. அங்கு சுமார் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12ஆவது பாரம்பரிய நெல் திருவிழா இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 169 வகையாக பாரம்பரிய நெல் விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால், தேசிய நெல் திருவிழா தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து மாட்டுவண்டியில் நெல் கோட்டை ஏற்றி விவசாயிகள் பேரணியாக வந்தனர். நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கான கருத்தரங்கும் நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்தும் 7 ஆயிரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் வருகை தந்துள்ளனர். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும், நீர் மேலாண்மை மற்றும் சந்தை வளர்ப்பு பற்றியும், கருத்தரங்கு நடைபெறுகிறது.