தமிழ்நாடு

`என்னையவே ஃபோட்டோ எடுக்றீங்களா...’ ஆவேசமாக துரத்திய காட்டு யானை; தலைதெறிக்க ஓடிய மக்கள்!

webteam

வால்பாறை அருகே ஆபத்தை உணராமல் காட்டு யானைகளை புகைப்படம் எடுத்தபோது காட்டு யானை விரட்டியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, காட்டெருமை கரடி போன்ற வனவிலங்குகள் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அருகே புது தோட்டம் பொள்ளாச்சி சாலையில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 25 காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் யானைகளை பார்த்து புகைப்படம் எடுத்து சத்தமிட்டனர். மனிதர்கள் - வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர், யானை அருகில் சுற்றுலா பயணிகளை செல்ல விடாமல் தடுத்து நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து நான்கு யானைகள் பிரிந்து மக்கள் நிற்கும் கோவில் பகுதிக்கு வேகமாக வந்தது. இதையடுத்து வனத் துறையினர் யானைகளை விரட்டினர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் கோயில் அருகேயே நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் புகைப்படம் எடுத்து ஆரவாரம் செய்தனர். சிறிது நேரத்தில் தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டு யானைகளை அவர்களேவும் வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர்.

இதையடுத்து யானை செல்லும் பாதையிலேயே சுற்றுலா பயணிகள் சிலர் சென்று புகைப்படம் எடுத்தனர். இதனால் கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு யானை அவர்களை துரத்தியபடி சாலையை நோக்கி வரை விரட்டி வந்தது. இதில், அதிஷ்டவசமாக அவர்கள் உயர்தப்பினர். இருப்பினும், ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று புகைப்படம் எடுத்து வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கண்டிக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பதற்கு, அதிகாரிகள் பணியில் இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், யூனிபார்ம் மற்றும் விசில் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டுமென வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.