தமிழ்நாடு

விடுமுறையை கொண்டாட ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

கலிலுல்லா

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஓகேனக்கல்லில் குவிந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் இங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஞாயிறு விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல் களை கட்டியது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.