தமிழ்நாடு

தேக்கடியில் மூடு பனி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தேக்கடியில் மூடு பனி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

webteam

தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரளாவின் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி மற்றும் அதனை ஓட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகாலையில் இருந்தே நீடித்த கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் மலைப்பாதைகளில் சாலைகள் சரிவர தெரியாததால் வாகனங்கள் பகலிலும் முகப்பு விளக்கிட்டு சென்றன. மூடுபனியோடு சேர்ந்த குளிர் சீதோஷ்ணம் தேக்கடிக்கு வந்த சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.,

பொதுவாக கேரளாவின் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடியில் நவம்பர் இறுதி வாரத்தில் இருந்து டிசம்பர், ஜனவரி  மாதங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படும். ஆனால் இந்தாண்டு நவம்பர் மாத இறுதி வரை பனிப்பொழிவு இல்லாத நிலை இருந்தது. டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது லேசான பனி மூட்டம் இருந்தது. ஜனவரியில் அது அதிகரித்து ஜனவரியின் இறுதி வாரத்தில் பகலில் 10 முதல் 17 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தது.

பிப்ரவரி துவங்கியதில் இருந்து வெப்பநிலை சராசரியாக 25 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கிறது. இந்நிலையில் நேற்று குமுளி, தேக்கடி மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இன்று அதிகாலையில் இருந்தே இப்பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. 

திடீர் ”மூடுபனி” தேக்கடிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. கண்கள் ஈரக்காற்றால் குளிர, மனது மகிழ்ச்சியால் பறக்க, மலைகளை மூடும் பனியின் ரம்மியம் ரசித்துக்கொண்டே இருக்க சொன்னாலும், தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்பாதையில் சாலைகள் சரிவர தெரியாத நிலையும் உருவாகியுள்ளது.   இதனால் வாகனங்கள் பகலிலேயே விளக்கிட்டு சென்றன. குமுளி மலைப்பாதைகளின் வளைவு நெளிவுகளில்  பழக்கமில்லாத வாகன ஓட்டிகள் பலர், பெரும் சிரமம் கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.