தமிழ்நாடு

‘தொடர் கதையாகி வரும் மாஞ்சா நூல் மரணங்கள்’ - கடந்தகால நிலவரம் என்ன?

‘தொடர் கதையாகி வரும் மாஞ்சா நூல் மரணங்கள்’ - கடந்தகால நிலவரம் என்ன?

webteam

நொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த காலங்களில், மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவங்கள் எத்தனை?



சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே மகன் அபிமன்யு. கோபால் நேற்று தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறையல்ல; தொடர்கதையாக நடந்தேறி வருகிறது. இதற்கு முன் நடந்த சம்பவங்கள் பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளன.


2006 - சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் உயிரிழப்பு

2007 - வடசென்னையில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு

2011 - சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமி உயிரிழப்பு

2012 - அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரவாயலில் உயிரிழப்பு

2012 - தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழப்பு

2013 - சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள பாலத்தில் மந்‌தவெளியைச் சேர்ந்த ஜெயகாந்த் உயிரிழப்பு

2015 - பெரம்பூர் பாலத்தில் பெற்றோருடன் சென்ற 5 வயது சிறுவன் ‌அஜய் உயிரிழப்பு

2017 - கொளத்தூரை சேர்ந்த சிவபிரகாசம், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் உயிரிழப்பு

2019 -‌ தாம்பரத்தில் 2 சிறுவர்கள் படுகாயம்; அறுவை சிகிச்சை செய்ததால் பிழைத்தனர்