தமிழ்நாடு

அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியல: 108 ஆம்புலன்ஸில் சென்ற பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு

webteam

அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் மன உளைச்சல் ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகக் கூறி 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் புறநகர் பேருந்தில் ஸ்ரீகாந்த் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கும்பகோணத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பேருந்து திடீரென பழுதானதால் பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றிவிட்டு கும்பகோணம் டெப்போவிற்கு பேருந்தை ஸ்ரீகாந்த் ஓட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து கும்பகோணம் டெப்போவில் பேருந்தை பழுது நீக்கிய பின் மாலை 4 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சிக்கு புறப்பட தயாரான ஓட்டுநர் ஸ்ரீகாந்தை, திருச்சிக்கு செல்ல வேண்டாம் கும்பகோணத்திற்கு போகுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறிய ஓட்டுநர் ஸ்ரீகாந்த், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்த சம்பவம் தஞ்சை புதிய பேருந்து நிலைய போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.