செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்று இரவு மசினகுடி பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள். இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்நேரம் மசினகுடி பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்படாத நிலையில், ஏன் டார்ச் லைட் வெளிச்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவனை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, “ஒரே நேரத்தில் இருவர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். ஒருவருக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றொருவருக்கும் சிகிச்சை உடனடியாக தேவைப்பட்டதால் அவரை செவிலியர்கள் தங்கும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த அறையில் இன்று மாலை SHORT CIRCUIT ஆகி மின்விளக்கு பழுதானது. அவசரம் கருதி அவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. செவிலியர் அறையில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக சிகிச்சை அளிக்கப்படும் அறையில் மின்சாரத் துண்டிப்பு ஏற்படவில்லை” என்று கூறினார்.