தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இன்று பேசுபொருளான முக்கியமான 10 அரசியல் நகர்வுகளை இங்கே விரிவாக காணலாம்..
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
செஞ்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பவுன்சர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதை மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சீமான், பிரச்னையை பேசி தீர்க்காமல் அவரும் அடிப்பது போல் கீழே இறங்கி வந்ததால் மேலும் பிரச்னை தீவிரமடைந்தது. பின்னர் செஞ்சி போலீசார் பத்திரிகையாளர்களை பத்திரமாக மீட்டு சென்றனர்.
தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடியப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருக்கிறது. அதை சரிசெய்வது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும், என்று பேசினார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் என்.டி.ஏ சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாஜக.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை, பாமக முழுமையாக ராமதாஸின் கையிலேயே இருப்பதை உறுதிபடக் கூறுபவையாக இருந்தன. தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது.
தூய்மைப்பணியாளர் போராட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துவரும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது, பொதுநல வழக்கு என்ற பெயரில் காவல்துறை நாடகம் நடத்தியது. வேறு சட்டங்களை மதிக்காத காவல்துறை தொழிலாளர்களுக்கு எதிராக என்றால் மட்டும் உடனே பாயும். எங்களின் போராட்டம் ஓயவில்லை, தொடரும். அடுத்தகட்டமாக ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் அல்லது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட வேண்டும் என அனுமதி கேட்டு வேப்பேரி காவல்நிலையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறோம் என்று கூறினர்.
நான் திருமாவளவன் கருத்தை ஏற்கவில்லை. தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல. தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாகாலாந்து ஆளுநராக பதவிவகித்த இல.கணேசன் சமீபத்தில் காலமானதால், மேலும் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என பாஜக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில்அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெக - வின் 2 ஆவது மாநில மாநாடு வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை தவெக தொண்டர்களுக்கு எழுதியுள்ளார், அதில், ”கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.