Top 10 political news today in tamilnadu PT web
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசியல் களம் இன்று : விஜய் அறிக்கை முதல் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு கடிதம் வரை!

விஜய் வெளியிட்ட அறிக்கை முதல் இபிஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த விமர்சனம் வரை இன்றைய அரசியல் களத்தில் நிகழ்ந்த 10 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...

Rajakannan K

1. அன்புமணி கூட்டத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு கடிதம்

சட்டவிரோதமாக பொதுக்குழுவை கூட்டிய அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளர் சுவாமிநாதன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், "கட்சியில் எவ்வித அதிகாரமும் இன்றி அன்புமணி கூட்டங்களை நடத்துகிறார். பாமக நிறுவனருக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்தியது தவறு. அதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்

தன்னைத் தானே தலைவர் என அன்புமணி அறிவித்துக் கொண்டதும் கட்சி விதிப்படி செல்லாது. அன்புமணிக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் விதிப்படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணியை குழு செய்யும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

2. ”மாநாட்டுக்கு தயாராவோம்” - விஜய் அறிக்கை

தவெக மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும்உணர்த்துவோம்; மாநிலம் அதிர மதுரை மாநாட்டுக்கு தயாராவோம் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி மதுரையில் நடக்கவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டடுள்ளார், அதில், நம்ம கொள்கை எதிரியையும். அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் எனவும் தவெக மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும்உணர்த்துவோம்... மாநிலம் அதிர மதுரை மாநாட்டுக்கு தயாராவோம். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

3. தாயுமானவர் திட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தால் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்துகின்றனர் என்று திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

4. ஓபிஎஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு மீண்டும் வருவார் - டிடிவி நம்பிக்கை

இதுவரை பாஜக தரப்பில் இருந்து யாரும் ஓபிஎஸ்ஸிடம் பேசியதாக தெரியவில்லை. டெல்லியி உள்ள பாஜக தலைவர்கள்தான் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தி மீண்டும் தே.ஜ.கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும். அவர் உறுதியாக தே.ஜ.கூட்டணிக்கு வருவார் என நம்புகிறேன்” என அமமுக பொதுசெயளாலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

OPanneerselvam TTV Dhinakaran

5. மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? - அண்புமணி கேள்வி

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700க்கு முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும்தான் நிறைந்துள்ளன. மு.க ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் எனத் தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி

6. அடிமைத்தனத்தை பற்றி இபிஎஸ் பேசலாமா - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

அடிமைத்தனத்தை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசலாமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்பாக பழனிசாமி முன் வைத்த விமர்சனத்திற்கு அவர் பதில்அளித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் உள்ள நட்பு, தேர்தல், அரசியலுக்கானது அல்ல என விளக்கம் அளித்தார். கம்யூனிஸ்டுகள் மேல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென பாசம் வந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

7. விஜயகாந்த் அறிவித்த போது பலரும் கேலி செய்தார்கள் - பிரேமலதா!

தமிழக அரசு தொடங்கியுள்ள முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், விஜயகாந்த் தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டத்தை அறிவித்த போது பலரும் கேலி செய்ததாக குறிப்பிட்டார்.

8. ஆக.23-ல் இபிஎஸ் அடுத்தக்கட்ட பயணம்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் சுற்றுப்பயணத்தை அடுத்தகட்டமாக வரும் 23 ஆம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 23ஆம் தேதி திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. 24ஆம் தேதியன்று திருச்சி புறநகர் வடக்கில் உள்ள தொகுதிகளில் பழனிசாமி பயணம் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதியன்று மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

9. விஜய் இதை செய்தால் பார்க்கலாம் - பிரேமலதா

கேப்டன் விஜயகாந்த் மானசீக குருவாக நினைத்தவர் எம்ஜிஆர்தான். அதனால்தான் எம்ஜிஆர் பிரசார வாகனம் விஜயகாந்திடம் வழங்கப்பட்டது. எம்ஜிஆர் காது கேளாத பள்ளிக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து விஜயகாந்த் உதவி செய்து வந்துள்ளார். அதனால்தான் தேமுதிக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை உள்ளது. எம்ஜிஆரை தனது மானசீக குரு என கேப்டன் தெரிவித்ததுபோல கேப்டனை, 'என்னுடைய அரசியல் குரு, மானசீக குரு' என விஜய் அறிவிக்கட்டும், அதன்பிறகு அவருடைய படத்தைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம்.

பிரேமலதா

10. "திமுகவுக்கும் கம்யூனிஸ்டுக்கும் உள்ள நட்பு.." - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“திமுகவுக்கும் கம்யூனிஸ்டுக்கும் உள்ள நட்பு தேர்தலுக்கானது அல்ல; எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மேல் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. எங்களுக்கு கம்யூ. உடன் இருப்பது கொள்கை, கோட்பாடு, லட்சிய நட்பு; இதுதான் பலருக்கு கண்ணை உருத்துகிறது; எங்களில் பாதி கம்யூனிஸ்ட்டுகள்; என்னுடைய பெயரே ஸ்டாலின்” என்று சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.