Top 10 political news today in tamilnadu PT web
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசியல் களம் இன்று : ED சோதனையில் அமைச்சர் முதல் RSS மீதான கனிமொழியின் விமர்சனம் வரை!

அமலாக்கத்துறை சோதனை முதல் கனிமொழியின் ஆர்.எஸ்.எஸ் விமர்சனம் வரை இன்றைய அரசியல் களத்தில் நிகழ்ந்த 10 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...

PT WEB

1) அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2) வாக்கு திருட்டு விவகாரத்தை திசைத் திருப்பவே ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை - ஆர்.எஸ்.பாரதி..

RS Bharathi

வாக்கு திருட்டு விவகாரத்தை திசை திருப்பவே அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

3) அமலாக்கத்துறையினர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு!

இன்று காலை முதல் அமைச்சர் ஐ. பெரியசாமி-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

4) சட்டமன்ற தேர்தலில் நாதக தனித்துப் போட்டியிடுவது உறுதி - சீமான்

சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாதக தலைமை அலுவலகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும். அதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்று கூறினார்.

5) பாமக வின் சிறப்பு பொதுக்குழு நாளை நடைபெறும் - ராமதாஸ்

மருத்துவர் ராமதாஸ்

கருத்து மோதல் காரணமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான உறவு சுமூகமான முறையில் செல்லாமல் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். பதிலுக்கு ராமதாசும் சிறப்பு பொதுக்குழுவை நாளை கூட்ட உள்ளதாகவும், அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

6) திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. சென்னையில் குவியும் விசிக தொண்டர்கள் !

திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் நாளை தனது 63-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில், விசிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு, இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள விசிக தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.

7) சுதந்திரதின உரையில் ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடியை கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்!

அமித் ஷா, மோடி, கனிமொழி

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்கவில்லை. இன்று அதைப் புகழ்ந்து பேசுவது, பொய்களால் வரலாற்றை மறுவரைவு செய்யும் ஒரு தீவிர முயற்சியே—பாஜக நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு தந்திரம், பாடநூல்களைத் திரித்து, நாடாளுமன்ற மனுக்களில் உண்மைகளைத் திருப்பிப் போடுவதன் மூலமும் இதையே செய்ய நினைக்கின்றனர்." என தனது சமூக வலைதள பக்கத்தில் எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

8) தூய்மைப் பணியாளர் பிரச்சனை : “தலித்துகள் மனிதர்கள் இல்லையா ? என அம்பேத்கர் பேரன் கண்டனம்

பிரகாஷ் அம்பேத்கர்

தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு தனது விமர்சனத்தை அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நடப்பது மிகவும் கொடூரமானது, இந்த அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், தலித்துகள் மனிதர்கள் இல்லையா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

9) அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது - செல்வப்பெருந்தகை விமர்சனம்

செல்வப்பெருந்தகை

எதிர்கட்சிகளை அச்சுறுத்தவும், பிளவுபடுத்தவுமே பாஜக அரசு அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. இவை ஜனநாயகத்தை சிதைக்கக் கூடியவை.

10) துணை முதல்வராக பணியாற்றிய உங்களுக்கு தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி-ன் தலைமைப் பண்பு பற்றி பேசிய ஓபிஎஸ் க்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி...

சமீபத்தில் ஓ. பன்னீர் செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப்பண்பு இல்லை என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஆர்.பி.உதயகுமார் "எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதுதான் நான்கரை ஆண்டுக்காலம் ஓபிஎஸ், துணை முதலமைச்சராகப் பணியாற்றினார். அப்போதெல்லாம் எடப்பாடியாரின் ஆளுமை பற்றி அவருக்குத் தெரியாதா? ஒபிஎஸ்ஸின் கருத்துக்கள் அவருடைய இயலாமையைக் காட்டுகிறது" என்று கூறினார்.